Tuesday, November 12, 2013

ராஜா ராணியும் உன்னதக் குறியீடுகளும்

சமகால இலக்கிய சூழலில் வாசகனாய் இருப்பது எவ்வளவு கஷ்டமானது என்று இருக்கும் கொஞ்ச நஞ்ச வாசகர்களிடம் கேட்டுப் பார்த்தால் புரியும். இங்கே மட்டும் தான் வாசகனை விட எழுத்தாளர்கள் எண்ணிக்கை மிக அதிகமாய் இருக்கிறார்கள் ஆனால் வாசகனுக்கு எந்தவொரு மரியாதையும் எழுத்தாளர்களிடமிருந்து கிடைப்பதும் இல்லை. போக தங்கள் புத்தகங்களை வாங்காவிட்டால் வேறு மொழியில் எழுதுவேன், இல்லையெனில் நான் தமிழை வேற ஸ்க்ரிப்டில் எழுதுவேன் என்பது போன்ற காமெடிகளும் நடக்கும்.

நல்ல இலக்கிய வாசகனாய் இருப்பதற்கு முக்கியத் தகுதி குறியீடுகளுடன் படம் பார்ப்பதே என சமகால இலக்கிய வாசகர் ஒருவர் ட்விட்டரில் குறிப்பிட்டு இருந்தார். குறியீடுகளுடன் பார்க்க எந்தவொரு படமும் தகுதியானதே, ஆனால் அதன் குறியீடுகளை நிறுவத்தான் விமர்சகனுக்கு தகுதி வேண்டும் என எங்கோ படித்தது நினைவு வர ராஜா ராணி என்ற படத்தைப் பார்க்கலாம் என முடிவு செய்தேன்.

மொக்கை சினிமா விமர்சகர்களும், விசிலடிச்சான் குஞ்சுகளும் இதை ஒரு மொக்கைப் படம் என்றும் ஒருமுறை பார்க்கலாம் என்றும் ரிங்க ரிங்கா பாடலில் லாஜிக் இல்லை எனவும் விமர்சித்திருந்தனர். ஆனால் இவை எல்லாம் ஓர் இலக்கிய வாசகனான என்னைப் பாதிக்கவில்லை. துணிந்து பார்த்தும் விட்டேன். அதில் ஏகப்பட்ட குறியீடுகள் இருப்பினும் என்னைக் கவர்ந்த இரண்டு உன்னதக் குறியீடுகளை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

குறியீடு 1:

கதாநாயகியின் அப்பா, நாயகனின் அப்பாவைப் பார்க்க செல்வார். நாயகனின் அப்பா ஒரு போலிஸ் அதிகாரி. அவர் காலையிலேயே குளித்து முடித்து திருநீற்றுப் பட்டையுடன் வரவேற்பார். கதா நாயகியின் அப்பா ஒரு வேற்று மதத்துக்காரர் என்பதை நினைவு கொள்க. இங்கே குறியீடாய் இந்தியாவைச் சொல்கிறார் இயக்குனர். காவல்துறை அதிகாரியாய் பிஜேபியையும், அவர்களுக்கு ஆட்சியைக் கொடுத்தால் சாதி, மத பிரச்சினைகளை இழுப்பார்கள் எனவும் (எங்க பழக்கம் இல்லை என காவல்துறை அதிகாரி காதலை நிராகரிப்பது), அதற்காய் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போவார்கள் எனவும் (கதாநாயகனை அடித்து மிரட்டி வெளிநாடு அனுப்பியபின், நாயகியிடம் எதுவுமே நடக்காதது போல சொல்வது) குறியீடாய் சொல்கிறார் இயக்குனர்.

குறியீடு 2:

போலவே கதாநாயகியின் தந்தை குடித்துவிட்டு காரை ஓட்டுகிறார். இது நம் ஊரில் நடக்கும் பாசிச மனநிலையை குறியீடாய் சொல்கிறார். பணம் இருப்பவன் குடித்து விட்டு வண்டி ஓட்டலாம், அவன் ஏதாவது விபத்து நிகழ்த்தினால் டிரைவர் சரணடைவான். சட்டம் என்பதே பணக்காரர்களால் உருவாக்கப்படுவதே, அவர்கள் எப்போதுமே சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள், அவர்களால் சட்டத்தை வளைத்து எளிதில் தப்ப முடியும், ஆனால் பொதுஜன மக்களுக்கு அது எட்டாக் கனியே (நாயகன் குடித்துவிட்டு நாயகியைக் கான ஆட்டோவில் தான் செல்வார்) என்பதை குறியீடாய் சொல்கிறார்.