Wednesday, January 15, 2014

புத்தகக் கண்காட்சியும் அடியேனும்

நானெல்லாம் புத்தகம் வாங்கி உடனே படிச்சிடற நல்லவனாகத்தான் இருந்தேன். அப்போவெல்லாம் ராணி காமிக்ஸ் திங்களூரில் ஒரே கடையில் தான் கிடைக்கும். லேட்டாப் போனால் கிடைக்காது. ஸ்கூல் முடிஞ்சதும் அடிச்சிப் பிடிச்சிப் போயி வாங்கிட்டு வீட்டுக்குப் போவதற்குள் படிச்சி முடிச்சிடுவேன். அப்புறம் க்ரைம், சூப்பர் நாவல், உங்கள் ஜூனியர், சுபா நாவல்கள், பாக்கெட் நாவல் இப்படி எதை வாங்கினாலும் உடனே படிச்சி முடிச்சிடுவேன்.

அதற்கு அப்புறம் தான் பிரச்சினை உருவாச்சி. திங்களூர், சிறுவலூர் நூலகங்களை புதுப்பிச்சி நிறைய புத்தகங்களை அடுக்கினாங்க. அந்தப் பக்கம் போன அம்மாவும் எங்க ரெண்டு பேருக்கும் (எனக்கும், தம்பிக்கும்) அங்கே அக்கவுண்ட் ஆரம்பிச்சி ஸ்கூல் பாடங்களைப் படிக்கறீங்களோ இல்லையோ நூலகத்தில் வாரம் ரெண்டு புத்தகமாவது படித்தாகணும்னு கண்டிஷன் போட்டுட்டாங்க. அப்படி ஆரம்பிச்சது தான் கல்கி, சாண்டில்யன் எல்லாம்.. அப்புறம் வாத்தியார் ஸார். அதற்குப் பின் அவர் அறிமுகப் படுத்திய சமகால கவிஞர்கள், எழுத்தாளர்கள் என எல்லோரையும் வாசிச்சேன்.

ஸ்கூல் முடிச்சி காலேஜ் முடிச்சி வர்ற வரைக்கும் எந்தப் புத்தகம் கிடைச்சாலும் அவ்ளோ ஏன் கோபி பஸ் ஸ்டேன்ட் கேப்டன் டீ ஸ்டாலில் பஜ்ஜி, போண்டா சாப்பிட கிடைக்கிற பேப்பர் வரைக்கும் உடனே படிச்சி/வாசிச்சி முடிச்சிடுவேன். இந்த கேப்டன் டீஸ்டால் குமார் அண்ணன் அப்போவெல்லாம் புத்தகக் கடை நடத்திட்டு இருந்தார். அவர் கூட கொஞ்ச நல்லாப் பழக்கம், ஏதாவது புதுசா நாவல் வந்திருந்தா ஓசில படிச்சிட்டு வந்திடுவேன். என்னை இலக்கியவாதியாக்கியதில் அவருடைய பங்கும் கணிசமானது.

அப்புறம் கொஞ்ச காலம் கேரளா, வட இந்தியா போன்ற இடங்களில் கம்பரசர் வண்டியில் அலைந்த போது ஏகப்பட்ட புத்தகம் வாங்குவேன், எப்படியோ கஷ்டப்பட்டு வாசிச்சிடுவேன். அப்புறம் சென்னைல அடிமாடு வேலைக்கு வந்ததுக்கு அப்புறம் வாங்கின எல்லாப் புத்தகமும் முழுதாய் வாசிக்காமல் அடுக்கி வச்சிருக்கேன். என்னோட கணிப்புப்படி 300+புத்தகங்கள் இருக்கலாம். அப்புறம் கணேஷ்னு நம்ம நண்பர் ஒருத்தர் இங்கே தான் இருக்கார். அவரும் பல புத்தகங்களை என்னை நம்பி வாசிக்கக் கொடுத்தார். அதெல்லாம் அட்டையைக் கூட திருப்பாமல் அப்படியே இருக்கு. அதில்லாமல் ஆங்கில நாவல்கள் கிட்டத்தட்ட முப்பதுக்கு மேலே வாங்கிட்டு வந்து போட்டிருக்கான் தம்பி.

போகவும் போன முறை புத்தகக் கண்காட்சியில் தோழர் கவிஞர் லதாமகன் உதவியில் பல புத்தகங்கள் வாங்கி அடுக்கி வச்சிருக்கேன். ஆனாலும் இந்த வருஷம் போயி அந்த லிஸ்ட்ட அதிகமாக்கலாம்ங்கிற எண்ணத்தோட தான் இருக்கேன். இதையெல்லாம் வாசிக்க ஒரு நாள் வராமலா போயிடும்?