Wednesday, July 17, 2013

என்ன மாதிரியான சமூகம்?

அன்புள்ள நாகா,

நான் வாழ்க்கையில் முதன்முறையாய் டிரெயினில் சென்றது கடந்த வாரத்தில் தான். அதுவும் கூட ஒரு நண்பனின் நண்பனின் நண்பன் கல்யாணத்திற்காக இன்னொரு நண்பனின் நண்பன் செலவில் சென்றேன். படிக்காதவன் படத்தில் விவேக்கின் அல்லக்கை சொல்வாரே அது போலத்தான் என் நிலைமையும். கழுதை முதன்முறையாய் டிரெயினில் போகப் போகிறோம் சைடு அப்பர் பெர்த் கிடைத்தால் என்ன, அப்பர் பெர்த் கிடைத்தால் என்ன என்ற மனநிலையில் தான் இருந்தேன். நல்லவேளை ஆர்ஏஸியில் ஜன்னலோர சீட்டே கிடைத்தது.

நிற்க, நான் சொல்ல வந்ததே வேறு. என்னருகில் நல்ல வாட்டசாட்டமாய் சிவப்பான வாலிபன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவன் கையில் ஒன்றரை லிட்டர் கோக் பாட்டிலை வைத்துக் கொண்டு அதைக் குடித்துக் கொண்டே வந்தான். எதிர் சீட்டில் அமர்ந்திருந்த அந்தக் குழந்தை இவன் கோக் குடிப்பதை பார்த்தவுடன் அவரது அப்பாவை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டது. டிரெயின் வேறு கிளம்பிவிட்டது. அவரால் இறங்கி இனி கூல்டிரிங்ஸ் வாங்கி வருவது சிரமம். அவரது அம்மாவும் அப்பாவும் சமாதானம் செய்ய எவ்வளவோ கஷ்டப் பட்டனர். அது சமகால எழுத்தாளர்களைப் போல பயங்கர அடம் பிடித்தது. குழந்தையின் அப்பா என் அருகில் இருந்த வாலிபனிடம் கோக் கொஞ்சம் தருமாறு கேட்க ஆரம்பித்தார்.

இவன் கொடுக்க மறுத்தான். சிவப்பா இருக்கிறவன் ஏன் கொடுக்க மாட்டேங்கிறான் என சமகால சமூகத்தை நொந்துகொண்டேன். அவர் என்னிடம், குழந்தை கேட்டுக் கூட கொடுக்க மாட்டேங்கிறார், நீங்களாவது எடுத்து சொல்லுங்க என்றார். நான் அவனிடம் தொண்ணூறு மில்லி கோக்கில் என்னாகிடப் போகுது, கொடுத்திருங்க என்றேன். அவன் என்னிடம், ஸார் நீங்க தீர்க்கதரிசி, நான் கோக்கில் சரக்கு மிக்ஸ் பண்ணியிருப்பதை நீங்க எப்படி ஸார் கண்டுபிடிச்சீங்க என்றார். அடப்பாவி இவனும் என்னைப் போலத்தானா (நானும் என்னோட பேக்ல அரைலிட்டர் ஸ்பிரைட் பாட்டில்ல மானிட்டர் கலந்து வச்சிருந்தேன்).

ஒரு குழந்தைக்கு ஒரு மூடி கோக் கொடுக்க முடியாத சமூகத்தில் தானே வாழ்கிறோம்?

அன்புடன்,
ராஜ்.

அன்பு ராஜ்,

நானும் இதே போல ஒரு கதையை வாரமலரில் படித்ததாய் ஞாபகம். அது வேற டிரெயின், வேற சரக்கு, வேற கூல்டிரிங்ஸ் தானே ஒழிய சமூகம் ஒன்றே தான். அப்போது என்ன சமூகத்தில் வாழ்ந்தோமோ அதே சமூகத்தில் தான் வாழ்கிறோம். நீங்கள் ஏன் ஃபிரெஞ்ச், இலத்தீன், கிரேக்கம் போன்ற மொழிகளில் ஒன்றைக் கற்றுக் கொண்டு இலத்தீன் அமேரிக்கா போய் குடிமக்களை கொண்டாடும் சமூகத்தில் வாழக் கூடாது? அதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள $9999.99க்கு டிடி மட்டும் அனுப்பலாம்.

-- நாகா