Sunday, September 7, 2014

பழனிச்சாமியும் வரலாறும்

தொண்ணூறுகளின் (தொன்னூறு?) பிற்பகுதியில் எங்கள் பகுதியில் கிணற்றில் நீர் குறைந்து வறட்சி ஏற்பட்டது. எங்கள் பகுதி என்பது வடக்கே கோபிசெட்டிபாளையம் தெற்கே குன்னத்தூர் மேற்கே கெட்டிச்செவியூர் கிழக்கே திங்களூர் சூழப்பட்ட புஞ்சை பாசனப் பகுதி. அச்சமயத்தில் போர்வெல் வண்டிகள் அதிகம் புழங்க ஆரம்பித்திருந்தன. அதற்கு முன் கிணற்றுக்குள் போர் போடும் ஸ்லோ ஸ்பீட் கம்பரசர்கள் கொண்ட சின்ன வண்டிகள் மட்டுமே இருந்தன.

அதன் அடுத்தகட்டமாக் மாஸ்டர் என்னும் பெரிய சைஸ் ராடுகள் கொண்ட ஹை ஸ்பீட் கம்பரசர்கள் பொருத்தப்பட்ட பெரிய வண்டிகள் போர் போட வந்தன. இப்போது இருப்பது போலில்லாமல் அப்போதெல்லாம் 4-1/2 இன்ச் போர்கள் மட்டுமே அதிகம் போடப்பட்டன. நிற்க. இங்கே நாம் போர் வண்டிகள் பற்றிப் பேச வரவில்லை.

போர் போட ஆரம்பிக்கும் முன், முதலில் எங்கே போர் போட வேண்டும் எனக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கென அப்போது சில பிரபலங்கள் தோன்றினர். கையில் வி ஷேப்பில் அமைந்த குச்சிகளையோ, தேங்காயையோ இல்லை கம்பியில் கட்டப்பட்ட நட்டுகளையோ பிடித்துக் கொண்டு தோட்டத்தில் ஒரு பக்கமாய் ஆரம்பித்து தோட்டம் முழுக்க நடப்பர். எங்கே அந்தக் குச்சி சுத்துகிறதோ, தேங்கா மேலெழும்பி கீழே வருகிறதோ இல்லை கம்பியில் கட்டப்பட்ட நட்டுக்கள் பெண்டுலம் போல ஆடுகிறதோ அங்கே தண்ணி இருக்கிறது என உத்து வைப்பர் (உத்து என்பது ஊற்று என்பதன் மரூஉ என நினைக்கிறேன்).

பின்னர் போர் வண்டியை வரவைத்து போர் போட ஆரம்பிப்பார்கள். அப்படியான பிரபலங்களை தண்ணீ பார்ப்பவர்/நீர்மட்டம் என சிறப்பு அடைமொழியிட்டு அழைத்தனர்.

அப்படித்தான் எங்கள் ஊரில் பழனிச்சாமி தண்ணி பார்ப்பவராக இருந்து புகழடைய ஆரம்பித்தார். அவர் வைத்த எல்லா உத்துகளிலும் தண்ணி இருந்தது.  அவருடைய சக்சஸ் ரேட் 100%மாக இருந்ததால் ஏரியாப் புகழ் பெற ஆரம்பித்தார். உள்ளூர் மட்டுமின்றி மேற்கே புளியம்பட்டி வரையிலும் தெற்கே ஈங்கூர் வரைக்கும் அவரின் புகழ் பரவ ஆரம்பித்தது. பக்கத்தில் உள்ள குன்னத்தூரில் போர் வண்டிகள் அதிகம். அவர்களும் இவரை பல ஊர்களுக்கும் கூட்டிப் போக ஆரம்பித்தனர்.

சாதாரணமான விவசாயியாக இருந்த பழனிச்சாமி பெரிய ஆளாக ஆரம்பித்ததும் வழக்கம் போல ஆளுமைகளுக்கு வரும் கர்வம், கெத்து என எல்லா சிறப்பு குணங்களையும் தனக்கும் வந்ததாகக் காட்டிக் கொண்டார். போனவுடன் பார்க்க முடிந்த பழனிச்சாமியை அதன்பின் அப்பாயின்மென்ட் வாங்கிப் பார்க்கும்படி ஆனது.

மறுபடியும் ரெண்டு வருடங்கள் போனது. எங்க ஏரியா முழுக்க போர் போட்டு தண்ணி எடுக்க ஆரம்பித்தனர். போர் வண்டிக் காரர்களும் அவர்கள் ஏரியாவை வடக்கே ஒரிசா, ராஜஸ்தான், பிஹார் என மாற்ற ஆரம்பித்தனர். பழனிச்சாமியையும் அங்கேயே கூட்டிப் போனார்கள். இமயமலை வரைக்கும் அவர் தண்ணி பார்த்து உத்து வைத்ததாக பிஎம்எஸ் போர்வெல்ஸ் மேனேஜர் கதிர் ஒருமுறை என்னிடம் சொல்லி இருக்கார்.

அப்புறம் சில பல வருடங்கள் போனது. எல்லா ஊரிலும் 6-1/2 - 8 இஞ்ச் வரைக்கும் போர் போட்டு, போர் மோட்டார் போட்டு தண்ணி எடுக்க ஆரம்பித்தனர். தோட்டத்திற்கு ஒரு போர் அதுவும் முந்நூறு/நானூறு அடி கம்பரசர் என இருந்த எங்கள் ஊர் தோட்டத்திற்கு நாலஞ்சு போர்கள் அதுவும் ஆயிரம்/ரெண்டாயிரம் அடிகள் ஸிஆர்ஐ/கேஎஸ்பி/டெக்ஸ்மோ மோட்டார்கள் என மாறின. பழனிச்சாமியின் சக்சஸ் ரேட் 30-50% என மாறியது.

அடுத்த வறட்சியில் பழனிச்சாமி வைத்த உத்தில் எதிலுமே தண்ணி வரவில்லை. மக்களும் அவரை மறந்தனர். வரலாற்றில் பெரிய ஆளாக வருவேன், என்னுடைய உத்து என்னைக்குமே பொய்க்காது, நம்ம ஊரில் மட்டுமல்ல வடக்கே பல மாநிலங்களிலும் நாம் பேமஸ் என அடிக்கடி தன்னுடைய அல்லக்கைகளிடம் சொல்லிக் கொண்டே இருப்பார்.

இப்போதும் பழனிச்சாமி இருக்கிறார். ஆனால் அவரைக் கொண்டாடத்தான் ஆளில்லை.

இதற்கும் சக எழுத்தாளர் ஒருவர் வரலாறு படிக்கிறேன் என சொல்லிக்கொண்டு இருப்பதற்கும் எந்த ஒரு ஸ்நானப்ராப்தியும் இல்லை.